பஞ்சவர்ணக் கிளியும் ,அண்டங் காக்கையும்

பஞ்சவர்ணக் கிளியும் ,அண்டங் காக்கையும்

ஒரு ஊர்ல ஒரு பஞ்ச வர்ணக் கிளி இருந்துச்சாம். அதுக்கு பக்கத்து வீட்டுல
கன்னங் கரேல்னு ஒரு அண்டங் காக்கா வாழ்ந்துட்டு வந்துச்சாம். பஞ்ச வர்ணக் கிளி பார்க்கவே ரொம்ப ரொம்ப அழகாம். அதனோட அழகு மேல அதுக்கு ரொம்ப பெருமை. வெறும் பெருமை மட்டும் பட்டுகிட்டு சும்மா கிடந்து இருக்கலாம் அந்தக் கிளி. ஆனா அதுக்கு இந்தக் கன்னங் கரேல்னு இருந்த அண்டங் காக்காவை தன்னோட ஒப்பிட்டுப் பார்த்து தன் அழகு மேல ஒரே கர்வம் வேற வந்துச்சாம்.

ஒரு நாள் இரண்டும் ஒன்னா இரை தேடக் கிளம்பிச்சாம் . வழக்கமாய் போற காட்டுக்கு அருகே, ஒரு பூங்கா வனத்துல சின்னக் குழந்தைங்க நிறைய பேர் பூப்பந்தாட்டம் ஆடி கிட்டும் சருக்கா மெத்தையில் சறுக்கிக் கிட்டும் மகிழ்ச்சி பொங்க விளையாடி கிட்டு இருந்தாங்களாம். அப்ப அந்தப் பக்கம் வந்த இந்த கிளியை பார்த்ததும் குழந்தைங்க குதூகலம் அடைஞ்சி, அவங்க சாப்பிட கொண்டு வந்த கடலையையும் , சுண்டலையும் கொஞ்சம் எடுத்து அதுக்குத் தூக்கிப் போட்டாங்களாம். கிளியோட சேர்ந்து ஆசையா சாப்பிட வந்த காக்காவை “ஷூ ஷூ ” னு சொல்லி விரட்டி அடிச்ச பசங்க, பஞ்ச வர்ணக் கிளிக்கு மாத்திரம் , இன்னும் துண்டு செய்த பழங்களையும் கொடுத்து ராஜ உபச்சாரம் பண்ணாங்களாம்.

மரத்து மேல உட்கார்ந்து பரிதாபமாய் பார்த்துட்டு இருந்த அண்டங் காக்காவை , கர்வமாய் பார்த்து சிரிச்சுதாம் பஞ்ச வர்ணக் கிளி . நல்லா சாப்டுட்டு மரத்து மேல போய் உட்கார்ந்து கிட்டு, ” ஐயோ பாவம் நீ..உனக்கு எதுக்கு இப்படியும் ஒரு பொழப்பு ..இந்த ஜன்மத்துல தான் நீ என்னை மாதிரி இல்லை..அட் லீஸ்ட் .. அடுத்த ஜன்மத்துலயாச்சும் என்னை மாறி ஒரு பஞ்ச வர்ணக் கிளியா பொறக்கனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்க… உன்னை பார்த்தால் யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது பாரு.. ” என்று சொல்லி காக்காவை ஏளனம் பண்ணுச்சாம்.

மேலும் விடாம, “அதோ நான் சாப்டதில் கொஞ்சம் மிச்சம் இருக்கு பாரு.. எல்லோரும் போனப்பறம் நீயும் கொஞ்சம் சாப்டு”, என்று ரொம்ப கர்வமாய் சொல்லுச்சாம்..

அண்டங் காக்கைக்கு இதை எல்லாம் கேட்டு ரொம்ப வருத்தமாய் போச்சாம்.. இறைவா என்னை மாத்திரம் ஏன் இப்படி பொறக்க வச்ச.. எல்லோரும் வேணாம்னு ஒதுக்கற மிச்சங்களையும் எச்சில்களையும் சாப்டுட்டே இப்படி என்ன ஒரு வாழ்க்கை.. எனக்கு.. குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொல்வாங்களே .. அந்தக் குழந்தைகளுக்குக் கூட என்னை பிடிக்கலையே.. என்னை ஏன் இப்படி படைச்ச .. என்று புலம்பிக் கொண்டே ஒன்னும் சாப்பிடாமல் வெறும் வயித்தோட, கிளியோட வருத்தத்தோட வீட்டுக்குக் கிளம்பிடுச்சாம் காக்கா.

சாப்பிடமால் வந்த காக்காவை பார்த்து , ” நீ ஏற்கனவே கருப்பு..இதுல இப்படி சாப்பிடாமல் குச்சி குச்சியா ஆனால் , அப்பறம் உன்னை பார்க்க சகிக்குமா ..” என்று மேலும் தன் வண்ண இறக்கையை ஆட்டி கர்வமாய்ப் பேசி வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சிச்சாம் இந்தப் பஞ்ச வர்ணக் கிளி.

சில நாட்கள் இப்படியே ஓடுச்சாம்.. அன்னைக்கும் இரை தேட இரண்டும் வழக்கம் போல ஒன்னாக் கிளம்புச்சாம் ..அதே பூங்காவிற்குத் தான் போகனும்னு கிளி அடம் பிடிக்க, . அதுக்கு காக்கா ” அங்க ..வேணாம் பா .. இன்னைக்கு நாம வழக்கமாய் போகும் பக்கத்துக் காட்டுக்கே போலாம். அங்க நிறைய புத்தம் புது பழங்கள் இருக்கும் . ருசியான பருப்பு வகைகள் கிடைக்கும்.. ஆசையாய் திண்ணலாம்னு “, சொல்லுச்சாம்.

அத கேட்டு கிளிக்கு ஒரே கோவம் வந்துச்சாம். அது காக்காவை பார்த்து “என் மேல உனக்கு ரொம்ப பொறாமை .. என்னை மத்தவங்க புகழரதை பார்த்து உனக்கு ரொம்ப வயித்து எரிச்சல் ..அதான் இப்படி நீ புலம்பற ..நீ வேணா போ ..நான் வர மாட்டேன் ” என்று சொல்லுச்சாம்.. அதுக்கு காக்கா ” வேணாம் ..அடிக்கடி ஒரே இடத்துக்கு நீ போறது உனக்கு நல்லது இல்லை.. நீ வேற ரொம்ப அழகா இருக்க ..அதனால உன் நல்லதுக்கு தான் சொல்றேன்னு “, எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துச்சாம்..

கிளிக்கு கோபம் அதிகமாய் ஆகி .. ” சீ வாயை மூடு.. எனக்கு நல்லது எதுன்னு எனக்கு தெரியும் ..நீ உன் வேலையே பார்த்துட்டு போ..எவ்வளவு பொறாமை என் மேல உனக்கு ..” என்று சொல்லிட்டு , சமீபத்துல அடிக்கடி போகும் பூங்கா வனதிற்கே பறந்து போச்சாம்..கிளி.

காக்காவும் வேற வழி இல்லாமல் தனியாகவே காட்டுக்கு போய் கொஞ்சம் பழங்களை சாப்டுச்சாம் ..ஆனா அதுக்கு மனசு கேக்காம , மறுபடியும் தன்னோட பிரெண்டை தேடிட்டு அந்த பூங்காவனதுக்கே வந்துடுச்சாம்.

கிளி குழந்தைங்க போடும் பழத் துண்டுகளை எம்பி எம்பி சாப்டுட்டு உற்ச்சாகமாய் சிறகை விரிச்சு குதிச்சுக் கிட்டே இருந்துச்சாம். அப்ப அங்கு ஒரு பெரிய மீசைக்கார ஆள் ஒருத்தர் பெரிய தட்டில் பலவகை பருப்புகளையும் தானியங்களையும் வச்சிக்கிட்டு கிளிக்கு அருகில் வந்தாராம் . அதை பார்த்த காக்காவிற்கு இதில் ஏதோ சூது இருக்குமோ என்று சந்தேகம் வந்து கிளியை பார்த்து உரக்கக் கத்தி கூபிடுச்சாம்..

“கிளி..சாப்டது போதும்..சீக்கிரம் மேலே வா ..” என்று திடீர்னு கத்திய காக்காவை பார்த்த கிளி , ” ஒழிஞ்சது சனியன்னு நிம்மதியா இருந்தேன்..மறுபடியும் வந்துட்டியா..யாராச்சும் எனக்கு நல்லது செஞ்சாலே உனக்கு பொறுக்காதே ..கடவுளுக்கு உன்னை பிடிக்கவே பிடிக்கலை..அதான் உன்னை உன் மனசு போலவே கருப்பாய் படைச் சிட்டார் “, என்று கத்தி அந்த தட்டை நோக்கி ஆவலுடன், வேகமாய் பறந்து போச்சாம் கிளி.

படார்..நு ஒரு சத்தம். அதுவரை பருப்புகளை சுவாரஸ்யமா கொறிச்சுகிட்டு இருந்த கிளி, அப்பத்தான் யாரோ தன் மேல எதையோ வச்சி மூடரத்தை உணர்ந்து திகைச்சு போய் நிமிர்ந்து பார்த்துச்சாம் ..வேற யார்..எல்லாம் அந்த பெரிய மீசைக்கார ஆள் தான்..கிளியை தன்னோட கூண்டில் அடைச்சு மூடிகிட்டு இருந்தார்..

தன்னோட பிரெண்டை பார்த்து கண்ணீர் விட்ட காக்கா, கடவுளுக்கு மனசார நன்றி சொல்லுச்சாம்.. கடவுளே ..அடுத்த ஜன்மத்துலயும் என்னை காக்காவாகவே படச்சுடு.. அப்ப தான் எப்பவும் போல நான் இப்படி சுதந்திரமா இருப்பேன்.. இந்த அழகால வேற ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு எனக்கு இப்ப நல்லாவே தெரிஞ்சுடுச்சு ..” என்று சொல்லி தன் வீட்டுக்கு நன்றியுடன் பறந்து போச்சாம் காக்கா ..

குறிப்பு 1: இது குட்டீஸ் களுக்கான கதை.. ஆனால் பெரியவங்களும் படிச்சு கமெண்ட்ஸ் சொல்லணும் ..

குறிப்பு 2 : பிரணவ் நீங்க அண்டங் காக்காவை பார்த்தால் கூட பொறி கடலையை அள்ளி வீசறீங்க .. அதையும் ரசிக்கும் உங்க மனோபாவம் வளரும்போதும் மாறிடாமல் இருக்கணும் என்கிற பிரார்த்தனைகளுடன்,

அதீத அன்புடன்,
அம்மா

Share/Save/Bookmark

Comments are closed.